இந்தியா என்னும் பெயரின் காலத்தை இரண்டாயிரம் ஆண்டுகள் முன்கொண்டு செல்லமுடியும்

 0
இந்தியா என்னும் பெயரின் காலத்தை இரண்டாயிரம் ஆண்டுகள் முன்கொண்டு செல்லமுடியும்

இந்தியா என்னும் பெயரின் தோற்றம் குறித்த விவா தங்கள் தீவிரப்பட் டுள்ளன. இந்தியா Vs பாரத் என்னும் என்னும் எதிர்வுகள் வழியாக இது கூர்மைப்படுகிறது. இந்தியா என்னும் சொல்லை காலனிய உருவாக்கம் என்று இந்துத்துவம் கூறுகிறது. இதனை மறுப்பவர்கள் சிந்துநதி வட்டா ரத்தில் இருந்து இதன் தோற்றத்தை அடையாளப்படுத்துகின்றனர்.

வரலாற்றுக்கு முன்பிருந்தே வணிகத்தின் வழியாக இந்தியா என்று இந்த நிலப்பரப்பைக் குறிப்பிடும் வழக்கம் இருந்துள்ளது அதுவும் சிந்து பாயும் வடஇந்தியாவை மட்டும் வைத்தல்ல தென்இந்தியாவிலும் அந்த வழக்கம் இருந்துள்ளது என்பதை அரபுநாட்டுக் குறிப்புகள் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது .

 1)

வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே இந்தியாவின் மேற்குக்கடற்கரை வழியாக கடல்கடந்த வாணிகம் தீவிரப்பட்டுவிட்டது. முதலில் கிரேக்கர், ரோமர் இவர்களுக்குத் துணையாக அரபு நாட்டினர் அதன்பிறகு கிரேக்கம் ,ரோம் வீழ்ந்த பிறகு அரபு நாட்டினர் இந்த வணிகத்தில் முன்னிலைப் பட்டனர். சங்க இலக்கியத்தில் இடம்பெறும் யவனர் என்னும் சொல் இவர்களைக் குறிப்பிடுவது. மேற்குக் கடற்கரை எனும் போது இந்திய நிலப்பரப்பில் தெற்குப்பகுதி.

 இவ்வாறு தென்பகுதிக்கு வந்த அரபியர்கள் இங்கு விளைந்த புளியைப் பார்க்கிறார்கள். அதன் சமையல் பயன்பாட்டையும் பார்க்கிறார்கள் . புளியின் வடிவம் அவர்களுக்கு தங்களுடைய நாட்டில் விளையும் பேரீத்தம் பழத்தை நினைவு படுத்துகிறது. அரபு மொழியில் புளியைக் குறிப்பிட தமருல்ஹிந்த் என்னும் சொல்லொன்றை உருவாக்குகிறார்கள்.

 தமர் என்னும் அரபுச்சொல்லுக்கு பேரீச்சை என்று பொருள். புளியும் பேரீத்தம் பழத்தின் சாயலில் இருப்பதால் இந்தியாவின் பேரீச்சை என்னும் பொருள்படும்படி தமருல்ஹிந்த் என்று குறிப்பிடுகிறார்கள். தமருல்ஹிந்த்என்னும் அரபுச்சொல்லை அடியொற்றிதான் ‘TAMARIND’ என்னும் ஆங்கிலச்சொல் உருவானது என்னும் கருத்தும் இருக்கிறது.

 2)

சவுதி அரேபியாவில் இருக்கும் முஸ்லிம்களின் புனித இறைஇல்லமான கஃபாவின் நான்கு முனைகளில் ஒருமுனையின் பெயர் ருக்னுல்ஹிந்த். இந்தியமுனை என்பது இதன் பொருள். நபி முஹம்மது அவர்களின் பல்வேறு குறிப்புகளில் இந்தியா பற்றியக்குறிப்பு இருக்கிறது. ஒருமுறை நபி அவர்கள் கஃபாவின் இந்தியமுனைப்பகுதியில் நின்றுகொண்டு தன்னுடைய மேலாடையை நீக்குகிறார்கள். வீசும் காற்று அவர்களின் மேனியைத் தழுவுகிறது . அந்த அனுபவத்தை இந்தியாவில் இருந்து வீசும் ஏகத்துவத்தின் காற்று என்னைத் தழுவுகிறதுஎன்று நபிகள் குறிப்பிட்டார்கள் என்றும் ஒரு குறிப்பு இருக்கிறது.

3)

நபிகளின் காலத்தில் கஃபு என்னும் கவிஞர் இருந்தார். இவரின் தந்தை ஸுஹைர். அன்றைய அரபு வழக்கப்படி கஃபு இப்னு ஸுஹைர் என்று அவர் அழைக்கப்பட்டார். கஃபு இப்னு ஸுஹைர் நபியையும் அவர் அறிமுகம் செய்த இஸ்லாமிய சமயத்தையும் எதிர்ப்பதிலும் இழிவுசெய்து கவிதை புனைவதிலும் மிகத்தீவிரமாக இருந்தார். அவர் மீது முஸ்லிம்களுக்கு கடுமையான கோபம் இருந்தது. அந்தக்கோபம் கொலை செய்யும் அளவுக்கு இருந்தது .

 கஃபு இப்னு ஸுஹைரின் சகோதரர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவராக இருந்தார். அவர் கஃபு இப்னு ஸுஹைரை படிப்படியாக ஆற்றுப்படுத்தி இஸ்லாத்தின் பக்கம் அழைத்துவந்தார்.

இப்போது கஃபு இப்னு ஸுஹைருக்கு நபிகளை சந்தித்து இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொள்ளவேண்டும். நபியும் அவரின் தோழர்களும் தன்மீது கொலை வெறி யில் இருக்கிறார்கள். கஃபு இப்னு ஸுஹைர் மாறுவேடம் போட்டுக்கொண்டு நபியும் அவரின் தோழர்களும் இருக்கும் சபைக்கு செல்கிறார்.

 நபியைப் பார்த்து கஃபு இப்னு ஸுஹைர் ஒரு கேள்வி கேட்டார்.நபிகளே, ‘கஃபு இப்னு ஸுஹைரை ஒரு முஸ்லிமாக உங்கள் முன்னிலையில் நான் அழைத் துவந்தால் அவரை மன்னித்து ஏற்றுக் கொள்வீர்களா? ’ என்று கேட்டார் . அதற்கு நபிஏற்றுக்கொள்வேன்என்று பதில் கூறினார்.

 உடனே கஃபு இப்னு ஸுஹைர் தன்மேல் போட்டிருந்த அங்கியை கழற்றி இதோ நான்தான் கஃபு இப்னு ஸுஹைர் என்று கூறினார். அப்போது கஃபு இப்னு ஸுஹைர் நபி களிடம் தங்களைப்பற்றி புகழ்ந்து ஒரு கவிதைபாட அனுமதிவேண்டும் என்று கேட்க நபியும் அனுமதிக் கிறார்.

 அப்போது பாடப்பட்ட கவிதையின் பெயர்தான் பானத்ஸுஆது’. 58 பாக்களால் ஆன கவிதை . அதில் ஓரிடத்தில் கஃபு இப்னு ஸுஹைர் நபியைப் புகழும்போது , ‘உங்களின் திருமுகம் அல்லாஹ்வால் உருவாக்கப்பட்ட ஹிந்துஸ்தானின் வாள்என்று குறிப்பிடுவார்.

பானத்ஸுஆதுகவிதைகளில் தன்னைப்பறி கொடுத்த நபிகள் தன்மேல் போர்த்தி இருந்த போர்வையை எடுத்து கஃபு இப்னு ஸுஹைருக்கு அணிவித்து சிறப்பித்தார்கள் என்று இஸ்லாமிய வரலாறு குறிப்பிடுகிறது. நபிகளின் காலம் ஏழாம் நூற்றாண்டு எனும்போது அதற்கு பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே இந்தியா என்னும் சொல்லின் தொடக்கம் உருவாகிவிட்டது என்பதை கணிக்கமுடிகிறது.

4)

இந்தோனோசியா செல்ல இருக்கும் மோடியின் பயண அட்டவணையில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்னும் சொல் எடுத்தாளப்பட்டுள்ளது. என்ன செய்ய இந்தோ- ஏசியா என்னும் இரு சொற்களின் கூட்டாக அல்லவா இந்தோனோசியா இருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0